சரக்கு சேவை வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசு ஒரு லட்சத்து 10 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவற்றால் தொழில், வர்த்தகம் முடங்கியது. இதனால் ஜி.எஸ்.டி வரி வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதை ஈடு செய்ய மாநில அரசுகளுக்கு இரு வழிமுறைகளில் கடன் வாங்க மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது. இதில் தமிழகம் உட்பட 21 மாநிலங்கள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறும் முறையை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி.எஸ்.டி வரி வருவாய் பற்றாக்குறையை தீர்க்கும் மற்றொரு வழிமுறையாக மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற இருக்கிறது.
அனைத்து மாநிலங்களிலும் இந்த கடன் பெறப்படும். இந்த கடன் தொகை அனைத்தும் மாநில அரசுகளுக்கே அளிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த கடனுக்கான வட்டி மற்றும் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது யார் என்பதை நிதியமைச்சகம் தெரிவிக்கவில்லை.