கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளருமான திரு எம் சிவாஷங்கர் மீது வரும் 23ம் தேதி வரை கைது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என மத்திய அமலாக்க துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்த ஸ்வப்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் மற்றும் அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக பதவி வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம் சிவசங்கருக்கு தங்க கடத்தலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவப்னா உடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அமலாக்கத் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சிய சிவசங்கர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு கேரளா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத் துறையின் பதில் மனு மீது நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.