ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பால்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சுசீலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆவின் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக உள்ள தனக்கு துணை பதிவாளர் கிருஷ்ணதாஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் ஒரே ஆண்டில் தனக்கு 4 முறை குற்றம் நோட்டீஸ் வழங்கப்பட்டு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணதாஸ் மீது விசாகா ஆணை மூலம் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ண ராமசாமி ஆவினில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா என்றும் அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால் விசாகா குழுவின் முடிவுகளின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க பால்வளத்துறை இயக்குனர்களுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஆவின் பால் வளத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.