ஊழல் திருமணம், ஊழல் இல்லறம், ஊழல் தேனிலவு என அதிமுகவை முக.ஸ்டாலின் அடுக்கு மொழியில் விமரித்துள்ளார்.
அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி கொண்டு இருக்காங்க.
ஆனா உலகத்திலேயே பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மட்டும்தான் கொரோனவை வைத்து புதுசு புதுசா என்னென்ன ஊழல் செய்யலாம்னு, அதற்குரிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒருத்தர் இருக்காரே… அவர பத்தி சொல்லவே வேண்டாம். பரிசோதனை கருவிகளில் ஊழல், பரிசோதனை வெற்றிகரமாக செஞ்சி கோடி கோடியா குவித்துக் கொண்டு இருக்காரு. ஊழல் திருமணம் செய்து, ஊழலோடு இல்லறம் நடத்தி, ஊழல் குழந்தைகளை கட்டுப்பாடின்றி பெற்று வருவது அதிமுக ஆட்சி.
அவங்களோட இந்த ஊழல் தேன்நிலவு, ஊழல் குடித்தனம் எல்லாம் இன்னும் ஆறு மாதம்தான். அதன்பிறகு புதுக்கோட்டை மட்டுமல்ல… செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். நம்முடைய தமிழ்நாட்டிற்கு நிச்சயம் ஒரு புதிய வெளிச்சம் பிறக்க தான் போகுது. 10 ஆண்டுகளாக சூழ்ந்து இருக்கக்கூடிய இருட்டிலிருந்து மீண்டும் உதயசூரியன் வெளிச்சத்தைக் காண மக்கள் தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாம் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.