சென்னை ராயபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம் என்.ஆர்.டி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் செய்யது இப்ராஹீம்ஷா. இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இது தொடர்பாக செய்யது இப்ரஹிம்ஷ மனைவியின் தங்கை மகன் அசாருதீன் சையது இப்ரஹிம் ஷாவிடம் பேச முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ரஹிம் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் அசாருதீனை சுட்டார். பிறகு தனது கைகளிலும் அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதில் இருவருமே படுகாயமடைந்தனர். அசாருதீன் ஸ்டான்லி மருத்துவமனையிலும், இப்ராஹிம் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.