ஏர் இந்தியா நிறுவனம் சார்பாக மதுரையில் இருந்து மும்பைக்கு மீண்டும் விமான சேவை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் இருக்கின்ற ஏர் இந்தியா நிறுவன அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏர் இந்தியா நிறுவனம் சார்பாக மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினந்தோறும் விமான சேவை நடந்து வந்தது. ஆனால் அந்த விமான சேவை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால், வழக்கம் போல விமான சேவைகள் அனைத்தும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
அதன்படி வருகின்ற 25 ஆம் தேதி முதல் மும்பை- சென்னை -மதுரை – சென்னை – மும்பை விமான சேவைகள் தொடங்க உள்ளது. அந்த விமானம் காலை 9 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு சென்னை வந்தடையும். அதன் பிறகு சென்னையில் இருந்து 12 மணியளவில் புறப்பட்டு மதியம் ஒரு மணியளவில் மதுரை வந்தடையும். அதன் பிறகு அதே விமானம் மதுரையில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்னை சென்றடையும்.
பிறகு அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 6 மணிக்கு மும்பையை சென்றடைய உள்ளது. இந்த விமானம் தினந்தோறும் இதே நேரத்தில் இயக்கப்பட்டு வரும். நாள்தோறும் பயணிகளின் வருகையை பொருத்தே விமான சேவைக்கான கட்டணத்தில் சிறிது மாறுபாடு ஏற்படலாம். அதற்கான டிக்கெட்டுகளுக்கு இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.