கேரளா தங்க கடத்தல் வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை வரும் 23ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ சுங்கத்துறை அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்திப் நாயர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு சிவசங்கரை சுங்கத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிவசங்கர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சிவசங்கர் தாக்கல் செய்த மனு இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரிக்க நீதிமன்றம் வரும் 23ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 23ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.