கர்நாடக மாநிலத்தில் 80 அடி உயர நீர் வீழ்ச்சியில் சிக்கிக் கொண்ட தமிழக மருத்துவ மாணவரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா மாவட்டம் ஓசநகர் தாலுகாவில் கொடசாத்திரி மலை அமைந்துள்ளது. அங்கு ஹிட்லமனே என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியின் 80 அடி உயரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதனால் தினந்தோறும் அதனைக் கண்டு களிக்க பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதிலும் சிலர் சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சியில் ஏறி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பெங்களூரில் இருக்கின்ற மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் ஹாசனை சேர்ந்த அமோகா, தமிழகத்தை சேர்ந்த சஞ்சீவ், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மது ஆகிய 3 பேரும் கடந்த சனிக்கிழமை கொடசாஸ்திரி மலைக்குச் சென்று உள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் ஜீப் மூலம் ஹிட்லமனே நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நீர் வீழ்ச்சியில் குளித்து உற்சாகம் அடைந்த அவர்கள், 80 அடி உயர மலையில் மலையேற்றத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். அவர்கள் எந்த ஒரு பாதுகாப்பான உபகரணமும் இல்லாமல் தானாக மலை ஏறியுள்ளனர். அப்போது பாதி தூரம் சென்றவுடன் அமோகா மற்றும் மது ஆகிய இருவரும் கீழே இறங்கி விட்டனர். ஆனால் சஞ்சீவி மலையின் உச்சியை சென்றடைந்தார். அதன் பிறகு அவரால் கீழே இறங்க முடியாமல், 80 அடி உயர நீர்வீழ்ச்சியில் ஒரு பாறையில் ஒற்றைக்காலில் நின்றபடி சிக்கி தவித்தார்.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர்கள் இரண்டு பேரும் உடனடியாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை கட்டி சஞ்சீவை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பிறகு 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரை பாதுகாப்பாக மீட்டனர். மலையில் சிக்கிய அந்த நபர் இரண்டு மணி நேரமாக சிறிய பாறை ஒன்றில் ஒற்றைக்காலில் நின்று உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர் சோர்வாக இருந்ததால், அவருக்கு தண்ணீர் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மூன்று பேரையும் வனத்துறையினர் எச்சரித்து அவர்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.