பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2020,2021 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நடத்தி வருகிறது.
முதற்கட்ட கலந்தாய்வு வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். பின்னர் மாணவர் சேர்க்கை குறித்த இறுதி நிலவரம் தெரியவரும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அறிவிப்பு மூலம் தமிழகத்தில் டிசம்பருக்கு முன்பாக பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.