ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறி உள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
புதுவை மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்க, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 38 லட்சம் ரூபாயை இழந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டார். இது ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக தமிழகத்தில் நடைபெறும் நான்காவது தற்கொலையாகும். ஊரு ஒதுக்குப்புறத்தில் அல்லது மதுபான விடுதிகளில் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி சென்று கைது செய்த காலம் போய் தற்போது வெட்ட வெளிச்சமாக ஆன்லைன் சூதாட்டம் அரசு அனுமதியுடன் நடைபெறுவது காலத்தில் தவிர்க்க முடியாத மாற்றங்கள் என்ற பெரும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆரம்பத்தில் ஒன்று இரண்டு ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் இருந்த நிலையில், இன்று தினம் ஒரு நிறுவனம் தோன்றி மக்களை ஈர்க்க விளம்பரங்களை அனுப்பி வருகின்றனர். இது குறித்து கூறும் இணைய வல்லுநர்கள் முதலில் வருமானம் தருவது போன்று புரோகிராம்களை வடிவமைத்து, பின்னர் ஜெயிக்க முடியாத அளவிற்கு கடினமான கோடிங் செய்யப்படும் என்றும், பலர் குழுவாக விளையாடும் சூழலில் அதில் டம்மியாக கம்ப்யூட்டர் புரோகிராமிங் மூலமாக ஒருவர் விளையாடுவது போன்று காண்பித்து ஏமாற்றி வேலை நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விளையாட்டு அரசின் அனுமதி எதுவும் பெறவேண்டிய அவசியமில்லை என்பதால் நிமிடத்திற்கு ஒரு ஆன்லைன் நிறுவனங்கள் தோன்றி நம்மை பல லட்சம் வெல்லலாம் வாருங்கள் என்று கூறுகின்றன. கிரிக்கெட்டை மையமாக வைத்து விளையாடப்படும் ட்ரீம் லெவன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் எந்த தவறும் இல்லை என்றும் இது கிரிக்கெட் வீரர்களின் திறமையை மதிப்பீடு செய்து அதன் மூலம் விளையாடுவதால் அதனை சூதாட்டமாக கருத முடியாது எனக் கூறி பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
இதனை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆக எதிர்காலத்தில் மேலும் பல விதமான ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகள் நம்மை சூழலாம். எனவே இவற்றை அரசு முறைப் படுத்துவது அவசியம் என்றும் இணைய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்தில் வருமானத்தை இழந்த ஒரு சிலர் இதனை மாற்று வருமானமாக கருதி வாழ்வை இழந்து வருகின்றனர்.
கடன் வாங்கி சேமிப்பு இழந்து கடைசியில் வாழ்வையும் இழந்து விடுகின்றன. இனிமேல் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தால் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் அளவிற்கு இந்தியாவில் சூதாட்டம் துறை வளர்ந்து வருகிறது. அப்படி பிரம்மாண்டமாக வளர்ந்த ஒரு வர்த்தகத்தை இனி தடுப்பது இயலாத காரியம் என்பது கசப்பான உண்மை என்பதே பதில்.