தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியரை எடப்பாடி பழனிசாமி அரசு மீண்டும் நம்பவைத்து ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பள்ளி மாணவச் செல்வங்களை எடப்பாடி பழனிசாமி அரசு மீண்டும் ஒருமுறை நம்ப வைத்து ஏமாற்றிகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நீட்தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை மூடிமறைத்து ஏமாற்றிய இந்த ஆட்சியாளர்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு அதேபோன்றதொரு துரோகத்தை எப்போதும் செய்வது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பை தட்டிக்கழிக்கும் கையாலாகாத ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.