நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
முன்னதாக விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில் டுவிட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் ஆபாசமாக பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாடகி சின்மயி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஏன் இந்த சமுதாயம் எவ்வளவு மோசமாக இருக்கிறது எனவும், இதை பார்த்த அனைவரும் அமைதியாக இருப்பது வெட்கக் கேடானது எனவும் பதிவிட்டுள்ளார்.
பொதுவெளியில் ஒரு குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் இது போன்ற ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் எனவும் சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். தனது பதிப்போடு சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தையும் டாக் செய்துள்ளார். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.