தமிழகத்தில் சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தமிழகத்தில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு மற்றும் கோவை, வட தமிழக கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.