Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில்… எலிகள் அட்டகாசம்… நோயாளிகள் அவதி… வெளியான வீடியோ…!!!

சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நடமாடும் வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் சிலர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கே 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள், அங்கும் இங்கும் ஓடுவது போன்றும், திரவ ஆக்சிஜன் பைப் வழியாக செல்வது போன்றும் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைப் போலவே மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளிலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக நோயாளிகள் அனைவரும் புகார் அளித்துள்ளனர். அதனால் மருத்துவமனையில் எலிகளைப் பிடிப்பதற்காக எலி பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி மருத்துவமனையின் டீன் பாலாஜி நாதன் கூறுகையில், “மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை கவனித்து வருபவர்கள் சாப்பிட்டு விட்டு கீழே போடும் உணவு பொருட்களை உண்பதற்காகவும், மழைக்காலம் என்பதால் எளிதில் அதிக அளவு வருகின்றன. அதனை பிடிப்பதற்கு மருத்துவமனையை சுற்றிலும் 40 இடங்களில் எலி பொறிகள் வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி ஒரே நேரத்தில் 15 எலிகள் வரை பிடிபட கூடிய வகையில் இரண்டு மெகா எலி பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் எலிகளால் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கருவிகளுக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆக்சிஜன் குழாய்கள் அனைத்தும் இரும்பு கம்பியால் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனருகே செல்லும் ஒயர்களை எலிகள் சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் உணவுக் கடைகளில் மீதமாகும் உணவு பொருட்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |