தேவைப்படும் போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் நகர்வுகள் சூடு பிடித்துள்ளன. சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் தமிழக திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். பலரும் இணைய இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது.அந்த வகையில்தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவியது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது.
இந்தநிலையில் இதுகுறித்து விஜய்யின் தந்தை சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும்போது, எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பை நான் வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் தான் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது. எனவே பாஜக கட்சியில் இணைவது குறித்தான கேள்வி அபத்தமானது. இப்படியான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் கூப்பிடும் போது நாங்கள் அரசியலுக்கு வருவோம். நாங்களாக வந்து மக்களை கூப்பிடுவதை விட மக்கள் வா என்று கூப்பிடும் போது வருவதுதான் இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும் என்று விஜய்யின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.