தமிழகத்தில் புதிதாக 26 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி, 49,000 வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழகம் நோக்கி முதலீடுகளை உயர்மட்ட அதிகாரக் குழு கூட்டம் நடத்தி அதற்கான அனுமதி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு வந்ததாகவும், புதிதாக 23 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மூன்றாவது உயர்மட்ட அதிகாரக் குழு கூட்டத்தில் நிலுவையிலுள்ள புதிய 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு புதிதாக 25 ஆயிரத்து 213 கோடி அளவிற்கு முதலீடு வர இருப்பதாகவும், இதனால் 49 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு உள்ள இந்த நேரத்தில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை பலரையும் பாராட்ட வைத்துள்ளது.