பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ஓட்டுனரிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மினிவன் ஓட்டுனராக இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது தனது குடும்பத்தில் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சிலர் உனக்கு பில்லி சூனியம் வைத்து இருப்பதாகவும், அதனை எடுப்பதற்கு எடுப்பதற்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கோழியுடன் சென்னைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சாமியாரை கண்மூடித்தனமாக நம்பிய ராஜ்குமார் தனது மினி வேனை விற்று உறவினர் ஒருவருடன் சென்னையில் அந்த சாமியாரை சந்தித்துள்ளார். பின்னர் சாமியார் கேட்ட இரண்டு கோழிகளையும் இரண்டு லட்சம் ரூபாயையும் கொடுத்தார். ராஜ்குமாரிடம் இருந்து பணத்தை பெற்ற சாமியார் உடனடியாக தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து தான் ஏமாந்ததை உணர்ந்த ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடி செய்யும் போலி சாமியார்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.