பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது.
பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் பாட்னாவில் வெளியிட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக 11 முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல்அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக பீகாரில் மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் இந்தி மொழியில் மாநிலத்தில் கற்பிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும். மேலும் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. கூடுதலாக மாநிலத்தில் ஆசிரியர்களை நியமிப்பது மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது