பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும், திரு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அம்மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் நோய் பற்றிய அச்சத்தை பாஜக அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் கொரோனா தடுப்பூசி நாடு முழுமைக்கும் சொந்தமானது என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி கிடைக்க வேண்டிய நிலையில் பாஜக அதனை தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பது ஏற்புடையதல்ல என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் சமூக ஆர்வலர்கள் கோகுலே புகார் அளித்துள்ளார்.