குடிபோதையில் தகராறு செய்த கணவனை பெட்ரோல் ஊற்றிக் எரித்துவிட்டு மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் லட்சுமி தம்பதியினர். லட்சுமி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுதாகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லட்சுமிக்கும் சுதாகருக்குமிடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுதாகர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அங்கு சுதாகர் பிணமாக எரிந்த நிலையில் கிடந்தார். அவர் அருகே லட்சுமி மயங்கி கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் லட்சுமியை மருத்துவமனையில் அனுமதித்ததோடு சுதாகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமி சுயநினைவிற்கு திரும்பியதும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மது போதையில் தகராறு செய்து வந்ததால் அதனை தாங்க முடியாமல் மனைவி லட்சுமி தான் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததும் அதன்பின் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.