பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ராகுல்காந்தி பிரச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கி முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடியின் தேஜாஷ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜேடி vs பாஜக:
தேர்தல் பரப்புரையில் ஆர்ஜேடி கட்சி தலைவர்களும், பாஜகவும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நரேந்திரமோடி, ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில் கூட்டணியில் ஆர்ஜேடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாரும் அவ்வளவாக பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல்காந்தி இல்லாத நிலையில் ஆர்ஜேடியின் தேஜாஷ்வி யாதவ் தான் தற்போது அனைத்து பிரச்சாரங்களிலும் முன் நின்று தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
மூடநம்பிக்கை:
தற்போதைய முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது எதிர்ப்பு இருப்பதாகவும், ஆர்ஜேடியின் தேஜாஷ்வி யாதவ் பேரணிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் ஆர்ஜேடி கட்சி கருதுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆர்ஜேடி கட்சிக்கு ராகுல் காந்தியை விட தேஜாஷ்வி யாதவ் தேவையே அதிகம். இது தான் பிகார் மாநில தேர்தல் பரப்புரைக்கு பலனாக இருக்கும் என மாநில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை செய்யும் வேட்பாளருக்கு முடிவுகள் சாதகமாக இல்லாமல், பாதகமாக இருக்கின்றது என்ற மூடநம்பிக்கை உள்ள உள்ளதாகவும், அதனால் தான் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் கண்டுகொள்ளவில்லை எனவும் செய்தி வருகிறது.
காங்கிரஸ் கருத்து:
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரேம்சந்த் மிஸ்ரா கூறுகையில், நான் இந்த கருத்துக்கு உடன்படவில்லை. பரப்புரையில் இறுதி நேரத்தில் மட்டுமே மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை கட்சித் தலைவர்கள் செய்வார்கள். ஆர்ஜேடியின் தேஜாஷ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக உள்ளார். அவரே கூட்டணியின் முகமாக இருப்பதால் அவர் முன்னால் நின்று தேர்தல் பரப்புரை செய்தாலே போதும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட வில்லை. எனவே அவர் பீகார் மாநிலத்தில் முகாம் விட வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பிகார் மாநிலத்தில் நடைபெறும் 12 பேரணிகளில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கும் நிலையில், ராகுல்காந்தி வெறும் 6 பொதுக்கூட்டங்களில் மட்டுமே பங்கேற்கிறார். அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 28ஆம் தேதி நவாடாவின் ஹிசுவாவில் கூட்டு பேரணியை ஆர்ஜேடியின் தேஜாஷ்வி யாதவ்வும், ராகுவும் இணைந்து நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.