புதிய வேளாண் சட்டங்களால் முதலில் பீகாரிலும் தொடர்ந்து நாடு முழுவதும் மண்டிகள் மூடப்படும் என்றும் பிரதமர் திரு. மோடியின் நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திரு. ராகுல்காந்தி பிரதமர் திரு. மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திரு. மோடி எங்கு சென்றாலும் போய் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளதாகவும் பீகார் மக்களிடமும் போய் உரைப்பதாகவும் கூறினார். கடந்த தேர்தலின் போது இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறிய பிரதமர் பீகார் மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கினாரா என்ற கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தலை வணங்குவதாக தெரிவிக்கும் திரு. மோடி உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
புதிய வேளாண் சட்டங்களால் முதலில் பீகாரிலும் தொடர்ந்து நாடு முழுவதும் மண்டிகள் மூடப்படும் என்றும் பிரதமர் திரு. மோடியின் நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் திரு. ராகுல் காந்தி கூறினார். லடாக் எல்லையில் சீன ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட போது பிரதமர் திரு. மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என கேள்வி எழுப்பினார். சீனாவைப் பற்றி பேச திரு. மோடி அச்சப்படுவதாகவும் கூறினார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் திரு. மோடிக்கும் முதலமைச்சர் திரு. நிதீஷ்குமாருக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திரு. ராகுல் காந்தி கூறினார்.