பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக ஒரு பொய்யான அவதூறான கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். எனவே அவர் மீதும், பெரியார் யூடியூப் சேனலை நிர்வகிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு புகாரை ஆன்லைன் மூலமாக அளித்திருந்தார்.
அந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 6 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன் மீது கலகம் செய்யத் தூண்டி விடுதல், சாதி மத இன மொழி தொடர்பான விரோத கருத்துக்களை பேசுதல், உணர்ச்சிகளை தூண்டுதல், மதங்களை மையப்படுத்தி குற்றங்களில் ஈடுபடுதல், உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல், பெண்களை அவமதித்தல் என்ற 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.