கொரோனா மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்க கூடிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதி திமுக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு விரிவான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலாக கொடுத்துள்ளார். அதில் அரசு பள்ளியில் படித்த நான் தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்து கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பயில உள்ஒதுக்கீடு வழங்க அறிவித்ததாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் கடந்த கடந்த 5ஆம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர், சட்ட நீதிமன்ற சட்டத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆளுநர் அவர்களை சந்தித்து கொரோனா அறிக்கையை தாக்கல் செய்ய சென்றபோது, நீட் ஒதுக்கீடு 7.5% உள் ஒதுக்கீடு முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினேன் எதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கடந்த 20ஆம் தேதி அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்து நேரில் வலியுறுத்தியதும், விரைவில் முடிவு செய்ததாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் என்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் செய்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தரவில்லை என்று கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என்று முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் எங்களால்தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஆளுநருக்கு கடிதம், அறிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையை நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள் என முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நலன் கருதி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பட்டவுடன் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் விலையில்லா தடுப்பூசி போடப்படும் என்பதை தாம் அறிவித்ததாகவும், ஏற்கனவே கொரோனா மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அதிமுக அரசு செய்து வரும் நற்பெயரை கண்டு அரசியல் காழ்புணர்ச்சி அடைந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த புதிய அறிவிப்பினால் தமிழ்நாடு அரசுக்கு மக்களது ஆதரவு அமோகமாக பெருகி வருகிறது என்ற அச்சத்தின் காரணமாக வழக்கம்போல் அறிக்கை அரசியல் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார்.