2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தான் கிரே பட்டியலில் நீடிக்கும் என பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்ட எஃப்ஏடிஎப் என்று சர்வதேச அமைப்பு நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் நாடுகளை கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியலில் வைக்கிறது. கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள் ஒத்துழைக்காதவை என்றும் கிரே பட்டியலில் உள்ள நாடுகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நிலையில் உள்ளவை என்றும் தெரிவிக்கிறது.
லக்சூரி தொய்பா ஜெய்ஷ்இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தானை அக்டோபர் மாதம் வரை கிரே பட்டியலில் வைக்க அந்த அமைப்பு உத்தரவிட்டது. பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை முழுவதுமாக கண்காணிக்க பாகிஸ்தானுக்கு 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் அதன் 21 மட்டுமே அந்நாடு நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச நிதி நடவடிக்கை குழு வரும் பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் மீதமுள்ள நிபந்தனைகளையும் நிறைவேற்றவும் உத்தரவிட்டு உள்ளது.