அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் அனுமதி வழங்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொண்டதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பேசிய முக.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை வழங்கிட 7.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருக்கக்கூடிய தீர்மானத்திற்கு 40 நாட்கள் ஆகியும் இதுவரை தமிழகத்தினுடைய ஆளுநர் அனுமதி தரவில்லை. அதனை கண்டித்தும், அனுமதியை பெற்று தருவதற்கு வக்கற்ற ஒரு ஆட்சி எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி அதை வன்மையாக கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
நீட் என்பது பல்வேறு கொடுமைகளை கொண்ட ஒரு அநீதி. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால்…. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது ஒரு பலிபீடம். அனைவருக்கும் கல்வியை வழங்க வேண்டிய நிலையை சிதைத்து கோச்சிங் சென்டர் என்ற பெயரிலே லட்சக்கணக்கில் பணம் செலுத்தி கார்ப்பரேட் கம்பெனி ஆக கல்வியை மாற்றக்கூடிய திட்டம்தான் இந்த நீட். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது, தேர்வின் முடிவு வெளியிடுவதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, பலவேறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையிலே நமக்கென்று இருக்கக்கூடிய கொள்கை நீட் ஒரு காலமும் இருக்கக்கூடாது என்பதுதான். தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த வரையில் தமிழ்நாட்டில் நீட் நுழைய முடியல. இன்னும் வெளிப்படையாகச் சொல்கிறேன், அரசியலில் நமக்கு எவ்வளவு கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை நீட் தமிழ்நாட்டிலேயே நுழைய முடியவில்லை.
ஆனால் இன்றைக்கு எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி அதிமுக ஆட்சியில்… ஒரு அடிமையாக அவர் இருக்கின்ற காரணத்தால்… இந்த நீட் நுழைந்திருக்கிறது. எடப்பாடியை பொறுத்தவரையில் அவர் அஞ்சி நடுங்கி, கூனிக்குறுகி எப்படி தன்னுடைய முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக காலிலே விழுந்து, அந்த பதவியை பெற்று இருக்கிறாரோ..! அதே போல பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதனை அனுமதித்து இருக்கிறார், இதுதான் உண்மை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்தார்.