குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்-செண்பகவல்லி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சுரேனா(10) சுரேஸ்ரீ(7) என்ற 2 மகள்களும் சுதர்சன்(3) என்ற மகனும் இருந்தனர். கொத்தனார் வேலை செய்யும் சுரேஷ்குமார் அடிக்கடி மனைவி செண்பகவள்ளியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த செண்பகவல்லி தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
இந்நிலையில் நேற்று கணவன் மற்றும் மகன் வீட்டில் இல்லாத நேரம் அரளி விதையை தானும் சாப்பிட்டு இரண்டு மகள்களுக்கும் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மூன்று பேரும் மயங்கி கிடக்க அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செண்பகவல்லி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்ததில் எந்த ஒரு பலனும் இன்றி அடுத்தடுத்து இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து செண்பகவள்ளியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இரண்டு வருடங்களாக தீராத வயிற்றுவலியால் தனது மகள் அவதிப்பட்டு வந்தாள். இதுவே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்றும் கூறியுள்ளார். அதோடு தான் இறந்த பிறகு யார் மகள்களை பார்த்து கொள்வார்கள் என்று தான் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.