வருண் சக்ரவர்த்தியின் அசத்தலான பந்து வீச்சால் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில், திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராணா-சுனில் நரைன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அசத்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த நிதீஷ் ராணா 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த நரைன் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் நிதீஷ் ராணா தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ராணா 81 ரன்களையும், சுனில் நரைன் 63 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஜோடி ஏமாற்றத்தையே கொடுத்தது. பட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலே ரஹானே ஆட்டமிழக்க அடுத்துடுத்து விக்கெட் சரிந்தது. ஷிகார் தவான் 6 ரன்னில் பட் கம்மின்ஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஸ்ரேஸ் ஐயர் – ரிஷாப் பண்ட் ஜோடி மட்டும் சிறிது தாக்கு பிடித்த நிலையில் வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் டெல்லி கேப்பிடல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேஸ் ஐயர் மட்டும் 47 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.