டிரைனேஜ்க்கு குழி தோண்டியதில் 10 மாதங்களுக்கு முன்பு சொத்துக்காக தாயை கொன்று புதைத்த சம்பவம் வெளிவந்துள்ளது
மயிலாடுதுறை சீர்காழியை அடுத்த திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவரது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுடன் மனித உடல் பாகங்கள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார்.
அப்போது திருக்கருகாவூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த வேலு என்பவரின் தாய் சாவித்திரி 10 மாதங்களுக்கு முன்பு மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வேலுவிடம் விசாரிக்க தொடங்கினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சாவித்ரிக்கு ஒரு மகளும்,வேலு என்ற மகனும் உள்ளனர். வேலு தொடர்ந்து தனது தாயிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் பத்து மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டிற்கு வந்த வேலு தாய் சாவித்திரியை தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சாவித்திரி உயிரிழக்க வேலு வீட்டின் எதிரே குழிதோண்டி உடலை புதைத்துவிட்டார். பின்னர் தனது தாயை காணவில்லை என 10 மாதங்களாக நாடகமாடி வந்துள்ளார் என்பது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வேலுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.