ஐ.பி.எல் 2020 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தற்போதும் முன்னேற வாய்ப்புள்ளது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டாஸூக்கு பின் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, “ கணித ரீதியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தற்போது வாய்ப்பு உள்ளது, ஆனால் எந்த சீசனில் நாம் எப்படி விளையாடினோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். நாம் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. புள்ளிப்பட்டியலை பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் வெற்றி பெற்றால் அதிலிருந்து மேல் வருவோம்“ என்றார்.
தோனி சொன்னது போல் கணித ரீதியாக சி.எஸ்.கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தற்போதும் வாய்ப்புள்ளது. 11 போட்டிகளில் விளையாடி உள்ள சி.எஸ்.கே 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. சி.எஸ்.கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.
முதலில் சி.எஸ்.கே அணி எஞ்சி இருக்கும் 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். புள்ளிப்பட்டியிலில் முதல் 3 இடத்தில் இருக்கும் மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் சென்னை தவிர மற்ற அணிகளுடன் வெற்றி பெற வேண்டும். தற்போது புள்ளிப்பட்டியிலில் 4-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் இருப்பதால், அடுத்து வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றி பெறக் கூடாது. கொல்கத்தா அணிக்கு மீதம் 3 போட்டிகள் உள்ளது. மேலும் பஞ்சாப் அணி மீதமுள்ள 3 போட்டிகளில் 1 போட்டிக்கு மேல் வெற்றி பெற கூடாது.
அதேப் போன்று சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகளின் போட்டிகளும் முக்கியமானது. இந்த அணிகள் 2 வெற்றிக்கு மேல் பெற்றுவிட்டால் சி.எஸ்.கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது. சி.எஸ்.கே தற்போது -0.733 ரன்ரேட் உடன் உள்ளதால் அடுத்த 3 போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியத்துவமான ஒன்றாகும்.கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐ.பி.எல் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடதக்கது. அதேப்போன்று தற்போதும் சி.எஸ்.கே அணியும் 12 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பிருந்தாலும் அதுப் போட்டியின் முடிவுகளில் தான் உள்ளது.