கொரோனா களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் சம்பளம் வழங்காததற்கு தங்களது எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகின்றது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு அரசு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதால், போராட்டம் நடத்த முடிவு எடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் மருத்துவர்கள் சம்பள விவகாரம் பற்றி மேயரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர், வடக்கு டெல்லி மாநகராட்சியில் போதிய பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இந்து ராவ் மருத்துவமனை மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத தொடர் போராட்டத்தை டெல்லியில் தொடங்கியுள்ளனர். அவர்கள் முக கவசங்களை அணிந்து கொண்டு வாசகங்கள் எழுதிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே போராட்டத்தின் அடையாளமாக ராவணன் உருவ பொம்மை ஒன்றை தீயிட்டு எரித்தனர், இதற்கு காரணம் அரசு எங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என அப்போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.