மதுரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அமைந்துள்ள குடியிருப்பில் மர்ம குறியீடுகள் காணப்படுவதால் வடமாநில கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள DRO காலனி மதுரை மாநகரில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சில வீடுகளின் கதவுகள் அருகே பச்சை, ஆரஞ்சு, கருப்பு ஆகிய நிறங்களில் பென்சில் கொண்டும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இது அங்குள்ளவர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தை குறியீடு இடப்பட்டுள்ள சில வீடுகளில் இருசக்கர வாகனம் திருட்டும் நடந்துள்ளது. இதன் காரணமாக வடமாநில திருட்டு கும்பல் இது போன்ற குறியீடுகளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபடுகிறார்களா என சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திலும் குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.