தமிழகம் இன்னும் ஆறு, ஏழு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கின்றது. இதனால் அரசியல் நகர்வு மிகவும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக தமிழகத்தில் பலம் இல்லாமல் இருந்த பாஜக தற்போது ஆக்ரோசமாக தனது பணிகளை முன்னெடுத்து வருவதோடு, செல்வாக்கு பெற்ற கட்சியாகவும் மாறி வருகின்றது.
உறுப்பினர் பதிவு தொடங்கி அடுத்தடுத்து தேர்தல் நகர்வுகளை பாஜக செய்து வருவது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அறுதியிட்டுச் சொல்லும் அளவிற்கு அக்கட்சி தலைவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.
அதே போல கடந்த சில நாட்களாகவே பாஜகவில் பலரும் இணைந்து வருகின்றனர். தமிழக பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுத்து கட்சியின் வளர்ச்சி பாதையை உணர்த்துகின்றது. இந்நிலையில், கர்நாடக இசைக்கலைஞரும், தமிழ் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான மோகன் வைத்யா இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.