நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கு திறக்கப்பட்டதால் குறைந்த அளவே மக்கள் திரையரங்கிற்கு படம் பார்க்க செல்வதாக ஆய்வில் தெரிவிக்கின்றது.
கொரோனா காரணமாக 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள திரையரங்கு திறக்கப்பட்டது. தமிழகம், கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் பல வட கிழக்கு மாநிலங்களில் இன்னும் திரையரங்கம் திறக்க அனுமதி வழங்கவில்லை.
இந்தநிலையில் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் பொதுமக்கள் நிலை குறித்து லோக்கல் சர்க்கஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் வர இருக்கும் 60 நாட்களில் மக்கள் திரையரங்கு செல்வார்களா ? என்ற கேள்வி உட்பட பல கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர் திரையரங்கு சென்று படம் பார்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. வெறும் 4 சதவீத மக்கள் மட்டும் புது படங்கள் வந்தால் மட்டும் திரையரங்கு செல்வோம் என்று கூறியுள்ளனர். 3 சதவீதம் பேர் கொரோனவையும் கண்டுகொள்ளாமல் படம் பார்க்க செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
மொத்தத்தில்திரையரங்குகள் திறக்கப்பட்டால் அடுத்த 60 நாட்களில் வெறும் 7 சதவீத மக்கள் மட்டுமே திரையரங்கு செல்ல இருப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது. இதனால் மேலும் இரண்டு மாதங்களுக்கு தியேட்டர் மூடப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.