பண்டிகை காலம் என்பதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தற்போது மதுரையில் முழுவதுமாக குறையாமல் தினசரி 100-க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்று குணமாகி தங்கள் வீடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களில் இருந்ததை விட தற்போது குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மதுரையில் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் பயம் உள்ளது. அவ்வாறு மீண்டும் அதிகரித்தால், கொரானாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடலாம்.
மதுரையில் கொரோனா மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது ஆகும். அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் வேண்டும். இதுமாதிரியான சின்ன சின்ன கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கைகளை பின்பற்றினால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம். தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம், கூட்டமாக செல்வதை தவிர்த்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தலாம். இல்லாவிட்டால் மீண்டும் அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தால் பொதுமக்களை விட அது அதிகாரிகளுக்கு தான் கூடுதல் பிரச்சினையாக இருக்கும். ஆகையால் பொதுமக்கள், அரசின் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.