மத்தியபிரதேச இடைத்தேர்தலில் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் காணொளிக்காட்சி பிரச்சார உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று இடைத்தேர்தல் நடக்கிறது. பாஜக அரசு பெரும்பான்மை பெற இந்த தேர்தல் வெற்றி உதவும் என்ற நிலையில் அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நேரடிப் பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ.எம். கன்பில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
இதை விசாரித்த நீதிபதிகள் அரசியல் கட்சிகள் காணொளி மூலம் பிரச்சாரம் செய்யலாம் என்ற மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் கொரோனா காலத்தை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது பற்றி பொருத்தமான முடிவு எடுக்கவும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.