இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தையடுத்து 39 நாடுகளுக்கான விசா சலுகை நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த தேவாலயங்கள், அங்கு இருந்த ஓட்டல்கள் என அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் வெளிநாட்டவர் சதி இருக்கலாம் என்று தகவல்கள் எழுந்ததையடுத்து 39 வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா சலுகையை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது.இதுகுறித்து இலங்கை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா கூறுகையில், ‘நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில் இலங்கை விசா பெற்றுக்கொள்ளும் வசதியுடைய 39 நாடுகளுக்கு தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு விசா வழங்கும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.