குற்றப் பின்னணி உடையவர்கள் தாங்களை காப்பாற்றி கொள்ள பாஜகவில் சேர்கின்றனர் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் கையெழுத்து பிரசார பயணம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது , ”விவசாயிகளின் நலனில் பொறுப்பு இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது மற்றும் விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அனைவரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 10ஆம் தேதி வரையில் டிராக்டர் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்திடவும், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நவம்பர் 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும், குற்ற பின்னணி உடையவர்கள் தொடர்ந்து, தங்களை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளும் பாஜகவில் போய் இணைகின்றனர். தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. அதேபோல் சிபிஐ மத்திய அரசு கைக்குள் செயல்படும் கருவியாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும் ” என்றார்.