மேட்டுப்பாளையத்தில் பழைய இரும்பு கடைகள் செயல்பட்டு வரும் சந்தையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கடைகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன.
மேட்டுப்பாளையத்திலிருந்து சிறுமுகை செல்லும் சாலையில் சங்கர் நகரில் உள்ள பழைய இரும்பு சந்தையில் 200-க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பயன்பாடு முடிந்த காருகள் லாரிகள் இங்கு கொண்டுவரப்பட்டு உடைக்கப்படும். இந்த சந்தையில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சந்தையின் மையப்பகுதியில் பற்றிய தீ மளமளவென பரவியதில் 8 கடைகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. நிகழ்விடத்திற்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழைய கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் தீயில் கருகின. டயர்கள் எரிந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இரும்பு சந்தையில் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை பெரும் விபத்திற்கு காரணம் என்று இரும்பு கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.