குஜராத் துணை முதலமைச்சர் நித்தின்பாய் பட்டில் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வடோதரா மாவட்டம் கர்ஜுன் தாலுகா புருவள்ளி கிராமத்தில் நித்தின் பட்டில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது செருப்பு வீச்சு நிகழ்ந்தது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நித்தின் பட்டில் 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் நித்தின் பட்டிலை நோக்கி செருப்பை வீசினார்.
நித்தின் பட்டில் முகத்திற்கு அருகில் சென்று செருப்பு விழுந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செருப்பை வீசி விட்டு தப்பிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடோதரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதிர்தேசாய் கூறியுள்ளார். அந்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத்த்தில் 8 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.