தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தமிழக அரசு வன்மையாக கண்டிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஒதுக்கீட்டு ஆணையும் 15 விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் செயற்கை கோள் தொலைபேசியையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவொற்றியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகம் அடுத்த ஓராண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.
ராமேஸ்வரம் மீனவரை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியதை அரசு வன்மையாக கண்டிப்பதாக கூறிய அமைச்சர் இந்த சம்பவத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.