கொரோன அச்சுறுத்தலுக்கு இடையே பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டில் கொரோனா சூழலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இந்த பீகார் சட்ட மன்ற தேர்தல். மொத்தமாக 71 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். தற்போது அவுரங்காபாத்தில் இடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, அவை செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள கயா, அவுரங்காபாத். ரோஸ்தாஸ் என்ற மூன்று தொகுதிகளும் மாவோயிஸ்டுகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியை பொருத்தமட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப் படையினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த மூன்று இடங்களிலும் விரைவாக தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தற்போது தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர். மக்களும் முகக் கவசங்கள் அணிந்து வாக்கு செலுத்து கின்றனர். வாக்காளர்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் சனிடைசர் உள்ளிட்டவை வழங்கபட்டு சுமூகமான முறையில் தேர்தல் வாக்குப்பதிவு என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் கூடுதலாக பொதுமக்கள் வாக்கு செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்தொற்று உள்ளவர்களுக்கு வாக்கு செலுத்துவதற்கு தனி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதே போன்று 80 வயதுக்கு அதிகமாணவர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.