ஊரடங்கு எதிர்த்து இத்தாலி மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஐரோப்பாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவி அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை பல நாடுகளில் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அவ்வகையில் இத்தாலியிலும் மாலை ஆறு மணிக்குள் மதுபான விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதியில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த ரோம், பலெர்மோ, ஜெனோவா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தெரியவந்துள்ளது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட போது அதனை அமைதியாக ஏற்ற மக்கள் தற்போது ஊரடங்கு அறிவித்தலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வணிக நிறுவனங்கள் இப்போது தான் முதல் ஊரடங்கில் இருந்து விடுபட்டு வருவதாகவும் தற்போது மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்றால் எங்கள் தொழில் திவாலாகிவிடும் என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். டுரூன் பகுதியில் அமையப்பெற்றுள்ள பல்பொருள் அங்காடியை போராட்டக்காரர்கள் சூரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.