இளைஞர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யூடியூபில் பிரபலமான ரஷ்ய இளைஞர் மிகைல் லட்வின் தனது விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் காரை வயலின் நடுவில் வைத்து தீயிட்டு எரித்துள்ளார். 2.4 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மெர்சிடஸ் காரில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாக புகார் தெரிவித்துள்ள அவர் காரை எரித்த வீடியோவை யூடியூப்பில் பதிவிட்டுள்ளார்.
தனது காரை மெர்சிடஸ் டீலருக்கு 5 தடவை திருப்பி அனுப்பியும் காரில் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தொடர்ந்து 40 தடவைக்கு மேல் காரில் பிரச்சினைகள் சரி பார்க்கப்பட்டது. ஜெர்மனியிலிருந்து புதிய இயந்திரங்கள் ஆர்டர் செய்து மாற்றப்பட்டுள்ளது என்று டீலர் கூறிய நிலையிலும் காரில் பிரச்சினைகள் சரியாகவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மிகைல் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காரை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இது குறித்து மிகைல் கூறுகையில், “டீலர் உடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு என்ன செய்வது என்று யோசித்தேன் பின்னர் காரை தீயிட்டு கொளுத்தினேன், இதனால் நான் மகிழ்ச்சியாக இல்லை” எனவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். யூடியூபில் இந்த வீடியோவை 11 மில்லியனுக்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர்.