தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியது மகிழ்ச்சி அளிப்பதாக அந்நாட்டின் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நிறுத்தவில்லை என்றால் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையே மோதல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.