வெளிநாட்டிலிருந்து மகளைப் பார்க்க வந்த தாய்க்கு அவர் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலால் அதிர்ந்து போனார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜீஷா என்பவர் தனது கணவருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் மகன் பிரிட்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். நான்கு வயதான மகள் கேரளாவில் தனது தாத்தா பாட்டியுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீஷா தனது மகளை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அரசு விதிமுறைப்படி ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அதன்பிறகு தனது மகளை பார்ப்பதற்காக சென்றார்.
ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் ஜீஷாவின் 4 வயது மகள் மியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது உடல் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கேட்ட ஜீஷா சுக்குநூறாக உடைந்து போனார். இதுபற்றி தனது கணவர் மற்றும் மகனுக்கு தகவல் கொடுத்தார்.
இதனால் அவர்கள் கேரளாவிற்கு செவ்வாய்க்கிழமை வருவார்கள் என நம்பபடுகிறது. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தையின் சடலத்தை ஜீஷா பார்ப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை மற்றும் மகன் இறுதி சடங்கில் பங்கேற்க முடியுமா என்பது பற்றி தெரிய வரவில்லை. குழந்தையின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை அன்று செயின்ட் ஜோசப் நனாயா கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற உள்ளது.