திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் ஆசிட் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவை சேர்ந்தவர் சாந்தல். 27 வயதான இவர் எட்டு வருடங்களுக்கும் அதிகமாக தனது பள்ளி நண்பரை காதலித்து வந்தார். படிப்பு முடித்துவிட்டு இருவரும் புனேவிற்கு சென்ற நிலையில் சாந்தல் வீட்டு வேலை செய்யத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு புனேவில் சாந்தலை விட்டுவிட்டு அவரது காதலன் மட்டும் திரிபுராவிற்கு வந்துவிட்டார். அடுத்த மூன்று மாதங்களில் சாந்தலுடன் பேசுவதை நிறுத்தி முற்றிலுமாக தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.
இதனால் உடனடியாக தனது காதலனின் கிராமத்திற்கு சென்று அவரை சந்திக்க முயற்சித்தார் சாந்தல். ஆனால் அவரால் தனது காதலனை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ராஞ்சிக்கு சென்ற சாந்தல் சுகாதார பயிற்சி மையத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் துர்கா பூஜையின் போது பல்சேரா கிராமத்தில் வைத்து சாந்தல் தனது காதலனை மீண்டும் சந்தித்தார். இதனை அடுத்து அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த காதலன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சாந்தல் தனது காதலன் மீது அசிட் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எதிர்பாராத தாக்குதலால் மூக்கு மற்றும் கண்களில் படுகாயமடைந்த காதலன் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது தனது காதலன் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் தன்னை திருமணம் செய்ய மறுத்ததை தாங்கிக்கொள்ள முடியாதாலும் ஆசிட் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.