ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த காதலர்களை கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தினர் காதலனை தலைகீழாக கட்டி தொங்க விட்டதால் தாய் கதறி அழுதுள்ளார்.
இந்தோனேசியாவில் வசிக்கும் மரியோ நட்ரிடி(23)-டேசியானா(20) இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின்னர் இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தென்கரா மாகாணத்தில் கடந்த 20ஆம் தேதியன்று குடிபெயர்ந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெண்ணையும் தங்களுடன் வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் காதலனை பிடித்து அருகில் இருந்த முள்வேலியின் பக்கத்தில் தலைகீழாக சுமார் அரை மணி நேரம் தொங்க விட்டுள்ளனர். அங்கு வந்த மரியோ நட்ரிடியின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தலைகீழாக தொங்கியதால் நட்ரிடி கடுமையான தலைவலியை அனுபவித்து வந்துள்ளார். இது தனது மகனுக்கு எதிரான மனிதாபிமானமற்ற செயல் என தாய் துஜு ஜூலி யூலி கூறி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த வீடியோவையும் ஆதாரமாக வழங்கிய துஜு ஜூலி யூலி கூறுகையில், “என் மகனை மிருகத்தைப் போல நடத்துவதைக் கண்டு நான் கதறி அழுதேன். அவர்கள் என் மகனை தொங்க விட்டது மட்டுமல்லாமல் பல முறை அடித்தனர். என் மகனின் உரிமைக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். என் மகன் குற்றவாளி அல்ல” என்றார். இதுகுறித்து சாட்சியத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.