கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி திறக்கப்பட உள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை யாக கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் கடந்த மார்ச் 13ஆம் தேதி மூடப்பட்டது. ஏழு மாதங்களாக அரண்மனை மூடப்பட்டு இருந்ததால் பத்மநாபபுரம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாபபுரம் அரண்மனை திறக்கும்நாளை எதிர்நோக்கி பொது மக்கள் காத்திருக்கின்றனர்.
வரும் மூன்றாம் தேதி முதல் பத்மநாபபுரம் அரண்மனை திறந்து செயல்படும் எனவும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொடர்பான அச்சத்தில் இருந்து பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில் பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்பட உள்ள தகவலால் அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.