செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் இன்னும் 15 நாட்களில் ஏறி அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரபாக்கம் ஏரி. ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் வருவதால் இந்த ஏரி தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையும் தீவிரம் அடைந்து இருப்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகம் வர வாய்ப்பு உள்ளது. 18.21 அடி உயரம் கொண்ட ஏரியில் 2,182 பில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 460 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்தப் பகுதியில் இரவில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஏரி நீர்மட்டம் உயரம் 18 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டு இருக்கின்றது. பருவமழை அதிகரித்து நீரின் வரப்பு மேலும் அதிகரித்தால் அடுத்த 15 நாட்களுக்குள் ஏறி அதன் முழு கொள்ளளவை எட்டி விடும்.
அதன் பிறகு ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இதற்காக அனைத்து மதகுகளும் பராமரித்து தயார் நிலையில் இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல சென்னை மக்களின் மற்றொரு குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 845 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் செம்பரம்பாக்கம் செங்குன்றம் ஏரிகளுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்தமுள்ள 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவில் தற்போது சுமார் 1600 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பூண்டி ஏரி விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.